0041 79 785 16 85 wathanamtv@gmail.com

யாழ்ப்பாணம் மிருசுவில் படுகொலை குற்றவாளியான இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க விடுவிக்கப்பட்டமை நீதித்துறையை கேள்விக் குறியாக்கும் செயற்பாடு என்பதுடன் நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் விடயமாகும் என்று முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பொதுமன்னிப்பின் அடிப்படையில் யாழ்.மிருசுவில் படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க விடுவிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்..

2000 ஆம் ஆண்டு மிருசுவில் பகுதியில் வீடுகளைப் பார்க்கச் சென்ற எட்டுப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய ஐந்து இராணுவத்தினர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நால்வர் விடுவிக்கப்பட்ட நிலையில் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

 கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையிலேயே இந்தத் தண்டனை வழங்கப்பட்டது. இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்ட போதிலும் அந்த நீதிமன்றமும் அவரை குற்றவாளியாக கண்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது அந்த இராணுவ சார்ஜன்ட் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளமை நீதித்துறையினை கேள்விக்குறியாக்கியுள்ளது. அத்துடன் பொறுப்புக்கூறல் விடயத்தில் நீதியை எதிர்பார்த்திருந்த தமிழ் மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் செயற்பாடு கண்டிக்கத்தக்கதாகும்.

சிறைகளில் அப்பாவி அரசியல் கைதிகள் தொடர்ந்தும் வாடிவரும் நிலையில் அவர்களின் விடுதலை குறித்து இன்னமும் கவனம் செலுத்தப்படவில்லை. அவ்வாறிருக்கையில் கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து வருகையில் கொரோனா தடுப்புச் செயற்பாட்டுடன் மிருசுவில் படுகொலை குற்றவாளி விடுவிக்கப்பட்டுள்ளமை பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்றார்.

Share this:

error: Content is protected !!