அவதானமாகவும், நிதானமாகவும் எமது வாக்குப் பலத்தைச் செலுத்தவில்லை - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தவராசா கலைஅரசன்

Date: 2024-11-04
news-banner
அம்பாறை மாவட்டத் தமிழ் மக்கள் மிகவும் அவதானமாகவும், நிதானமாகவும் எமது வாக்குப் பலத்தைச் செலுத்தவில்லை என்றால் நாங்கள் நிச்சயம் மாற்றுச் சமூகங்களின் அடிமைகளாகிவிடுவோம். எனவே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் விட்ட தவறினைத் திருத்தியமைக்க வேண்டும். என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தவராசா கலைஅரசன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எமது அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் விட்ட தவறிலிருந்து விடுபட்டு எமதுபிரதேசத்திலே எமது அரசியல்வாதியைத் தெரிவு செய்வதற்கு உறுதுணையாக இருந்து செயற்பட வேண்டும். 

எமது அம்பாறை மாவட்டம் மூன்று இனங்களும் வாழுகின்ற மாவட்டம். நாங்கள் மிகவும் அவதானமாகவும், நிதானமாகவும் எமது வாக்குப் பலத்தைச் செலுத்தவில்லை என்றால் நாங்கள் நிச்சயம் மாற்றுச் சமூகங்களின் அடிமைகளாகிவிடுவோம்.

எமது சமூகம் எவ்வாறான துன்ப துயரங்களை அனுபவித்தது என்பது அனைவருக்கும் தெரியும். எமது மக்களின் துன்ப துயரங்களை எதிர்த்து நின்றதும், அவற்றை வெளி உலகத்திற்குக் கொண்டு சென்றது தமிழரசுக் கட்சியின் அரசியல்வாதிகளே.

இந்த நாட்டிலே பல வருடங்களாக யுத்த சூழலால் பாதிக்கப்பட்ட தமிழர்களை அந்த யுத்த சூழ்நிலைகளில் இருந்து மீள்வதற்கான செயற்பாடுகளை இந்த நாட்டை ஆண்ட எந்த அரசாங்கங்களும் முன்னெடுக்கவில்லை.

தற்போதும் நூறு வீதம் தமிழ் மக்கள் வாழுகின்ற இந்த பிரதேசமாகிய இந்த திருக்கோவில் பிரதேசத்திலும் கூட இன்னும் முழுமையான மீள்குடியேற்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை. இன்னும் எத்தனையோ பாடசாலைகள் இன்னும் புனரமைக்கப்படாமல் இருக்கின்றன.

எமது மக்களின் இவ்வாறான பிரச்சனைகள் தொடர்பாகவே எங்கள் வலியுறுத்தல்கள் இருந்தன. அதன் காரணமாகவே எங்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டன. 

இந்த அடிப்படையில் இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் பல கட்சிகள் களமிறக்கப்பட்டிருக்கின்றன. அம்பாறை மாவட்டத்திலே தமிழர்களின் வாக்குகள் சுமார் 108000 மட்டில் இருக்கின்றன. இங்கு 66 கட்சிகள் களமிறங்கியுள்ளன. இவ்வாறு ஒவ்வொரு கட்சிகளும் வாக்குகளை சிறுகச் சிறுகப் பிரித்தார்களாயின், எமது தமிழ் பிரதேசங்களில் அவ்வாறு வாக்குகள் அளிக்கப்படுமாயின் எமது பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆக்கப்படும். அவ்வாறு இல்லாமல் ஆக்கப்பட்டால் நிச்சயமாக எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சியிடம் இருந்து தேசியப் பட்டியல் எதிர்பார்க்க முடியாது. இதை நாங்கள் உறுதியாகச் சொல்லுகின்றோம். நாங்கள் எம் மக்களிடம் பொய் சொல்லி அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை. 

ஏனெனில் 2020ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் தலைவர், மட்டக்களப்பில் செயலாளர் ஆகியோர் தோல்வியுற்றிருந்த நிலையிலும், அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் தேவை என்பதற்காக கட்சிக்குக் கிடைத்த ஒரே ஒரு தேசியப் பட்டியலை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்க வேண்டும் என்று தீர்மானித்து எனக்கு வழங்கியிருந்தது. நானும் என்னால் இயன்ற வரையில் பல சேவைகளைச் செய்திருக்கின்றேன்.

அம்பாறை மாவட்டம் என்ற ரீதியில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை மாத்திரம் பார்க்க முடியாது. ஆனால் பரவலாக எமது தமிழ் பிரதேசங்கள் பலவற்றில் பல காலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சனைகளை ஓரளவுக்கேனும் தீர்த்து வைத்திருக்கின்றோம். 

தற்போது மாற்றம் என்ற ரீதியில் பல இளைஞர்கள் திசைமாறிச் செல்லுகின்ற நிலைமைகள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாது தேசியப்பட்டியல் என்றும் எமது மக்களை ஏமாற்றுகின்ற முன்முனைப்பிலே களமிறங்கியிருக்கின்றார்கள். இதிலே எமது மக்கள் தான் சிந்திக்க வேண்டும். எமது சமூகத்திற்குப் பொருத்தமான அரசியல் எது என்பதை மக்கள் உணர வேண்டும்.

தமிழ்த் தேசியப் போராட்டத்தில் எமது அடிப்படை உரிமை மீட்பு, நில மீட்பு என்ற விடயங்களையே நாங்கள் முன்வைத்திருக்கின்றோம். அந்த அடிப்படையில் பொத்துவில் கனகர் கிராமம், திருக்கோவிலில் வன இலாகாவினால் தடுக்கப்பட்டிருந்த காணிகள் என்பன எமது தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகளால் மாத்திரமே மீட்கப்பட்டன. இங்கு திருக்கோவிலில் இல்மனைட் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் போது நாங்களே எமது மக்களுக்காக முன்வந்தோம். அவ்விடத்திலேயே எமது தலைவர்களுடன் கதைத்து அதனைத் தடுத்தோம். அது நிரந்தரமான தடையாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எனவே எமது மக்களுக்கான சேவைகள் பலவும் எம்மால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எனவே எமது மக்கள் எப்போதும் எம்முடன் இருக்க வேண்டும். எமது அம்பாறை மாவட்டத் தமிழ் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்து தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட நிருபர்
ந.குகதர்சன்
image

Leave Your Comments